Sunday 4 October, 2009

2012 Controversy

இன்னும் திரைப்படம் வெளிவரவே இல்லை.அதற்குள் நம்மவர்கள் ஆரம்பித்து விட்டார்கள்,2012 controversy ஐத் தான் சொல்கிறேன்.2012 என்று ஓர் ஆங்கிலப்படம்.19,நவம்பர்'09 வெளியீடு.இயக்கம் Roland Emmerich(ரோலாந்து எம்மேறிச்-என்ன சொன்னாலும் சரி ஆங்கிலப் பெயர்கள் கண்டிப்பாக ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்பது என் கருத்து) .பிப்ரவரி 2008 லேயே படப்பிடிப்பை ஆரம்பித்து முன்னோட்டத்தையும் எப்போதோ வெளியிட்டு விட்டார்கள்.Roland Emmerich மீது இருக்கும் ஒரு பொதுவான விமர்சனம்,தன் எல்லா படங்களிலும் அமெரிக்காவும் அதன் Statue of Liberty யும் அழிந்து தரைமட்டமாவதைக் காட்டுகிறார்(Independence Day,Godzilla,Day after Tomorrow) என்பது.சாருக்கு அமெரிக்கா மேல் அப்படி என்ன கோபமோ? கண்டிப்பாக 2012 ல் உலகம் அழியப்போகிறது,எப்படி அழியப்போகிறது என்பது தான் கதை.இருக்கட்டும் படம் வெளியாகும்போது பார்க்கலாம். இப்போது 2012 ஐப் பற்றிய விஷயம்.21,டிசம்பர் 2012 ல் நிஜமாகவே உலகம் அழியப்போகிறது என்று அறிவியல் சொல்கிறது,ஆன்மிகம் டெல்கிறது இப்படி ஒரு கும்பல் சொல்லிக்கொண்டு திரிகிறது இணையத்தில். அதை மறுத்து ஒரு கும்பல் குமுறிக்கொண்டுள்ளது .அப்படி நடந்தால் நாம் எப்படி தப்பிப்பது என்பது பற்றி சில புத்தகங்கள் வெளியாகி ஏற்கனவே ஊரக நூலகங்களுக்கு அனுப்பியாகிவிட்டது. நண்பர் ஒருவர் அனுப்பிய பார்வர்ட் மெயில் அதற்கான ஏழு காரணிகளை உள்ளடக்கி இருந்தது.பார்ப்போம் :

முதலாவது, மாயன் காலண்டர் prediction-தென் அமெரிக்காவின் மிகப்பழம்பெருமையான (சுமார் கி.மு 2000 முதல் கி.மு 250 வரை வாழ்ந்த) மாயா இன மக்கள்.இவர்களது மாயன் நாகரீகம்.இவர்கள் கணிதத்திலும்,ஜோதிடத்திலும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.(உ-ம்) நிலவின் சுழற்சி சரியாய் 329.53020 நாட்கள் என்ற கணிப்பு.நமது சமீபத்திய அறிவியல் கணிப்பிற்கும் இதற்கும் வித்தியாசம் வெறும் 24 நொடிகளே.இவர்களே இந்த உலகம் 2012 ல் அழியும் என்பதையும் முன்பே கணித்துள்ளார்கள்.நிச்சயம் இதுவும் பலிக்கும் என்கிறார்கள்.

இரண்டாவதாக சூரியப் புயல் -ஒரு குறிப்பிட்ட கால அளவில் சூரியனில் மிகப்பெரிய அளவிலான புயல் வீசிக்கொண்டுள்ளதாகவும் 2012 ல் மீண்டும் அந்த புயல் சூரியனில் வீசலாம்,இதனால் அபரிமிதமான கதிர் வீச்சுக்கள் வெளிப்பட்டு அனைத்து செயற்கைக்கோள்களையும் மற்றும் பூமியில் உள்ள உயிரினங்கள்,தாவரங்கள் மொத்தமாக அழிந்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.

மூன்றாவது காரணம், சமீபத்திய ஆராய்ச்சி -சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வு நிலையத்தில் கடந்த 2008 ல் நிகழ்ந்தது.இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதைக் கண்டுபிடிக்க உதவும் அந்த கடவுளின் துகளை(Higgs boson) அறிய ,matter(பருப்பொருள்) ,antimatter(எதிர்ப்பொருள்) இரண்டையும் எதிரெதிர் திசையில் ஒளியின் வேகத்தில் செலுத்தி மோத வைத்து,மோதலின் போது எழும் பெரு வெடிப்பில் வெளியேறும் துகள்கள் மற்றும் அதன் தன்மைகள் பற்றிய ஆராய்ச்சி.2008 ல் நடந்தது ஒரு சாம்பிள்.2012 ல் செர்ன் முழு அளவில் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளது.இது மிகவும் ஆபத்தானது.பல ஆயிரம் அணு ஆயுதங்கள் வெளிப்படுத்தும் சக்தியை இது வெளிப்படுத்தும் இதனால் பூமியே முழுவதுமாக அழிந்து விடும்.

நான்காவது மதவாதிகளின் நம்பிக்கை -பைபிள் தீர்க்க தரிசன கூற்றுப்படி கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தெளிவாகச் சொன்னால் நியாயத் தீர்ப்பு நாள் 2012 ல் நிகழும்,சீன சாத்திரமான சைனீஸ் புக் ஆப் சேஞ்சஸ் மற்றும் சில இந்து மத கோட்பாடுகளும் இதையே சொல்லுகின்றன.

ஐந்தாவது,உலகின் மிகப்பெரிய உறங்கும் எரிமலை -அமெரிக்காவின் எல்லோஸ்டோன் பூங்கா வெந்நீர் ஊற்றின் அடியில் உறங்குகிறது(வெந்நீர் ஊற்றுக்கு காரணம் இதுதான்).அது சுமார் 650000 வருடங்களுக்கு ஒருமுறை மிகப்பெரிய வெடிப்பினை வெளிப்படுத்தும்.இதுவும் 2012 ல் வெடிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஜியாலஜிஸ்ட்டுகள் கூறுகின்றனர்.

ஆறாவது,பெர்க்லி யுனிவெர்சிட்டி இயற்பியலாளர்களின் கணக்கிடல்.எளிய கணிதம் மூலம் அவர்கள் எண்களை வைத்து கணித்துக்காட்டிய விதம்,99 சதவீதம் நடக்கும் என்கிறார்கள்.

ஏழாவது காரணமாக,புவி காந்தப்புலம் ஒவ்வொரு 750000 வருடத்திற்கு ஒருமுறை வட,தென் துருவங்களை அப்படியே அலேக்காக இடமாற்றம் செய்யும்(இப்போதும் இது மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது).இந்நிகழ்வின் போது சூரியனின் அல்ட்ரா வயலெட் கதிர்கள் தாக்கம் அதிகளவில் பூமியின் மீது தடையே இல்லாமல் நடைபெறும்.அவைகள் தோலில் பட்டாலே தோல் கருகி விடும் அபாயம் உண்டு.

மேற்கூறிய காரணங்களால் புவியும் அதில் உள்ள அனைத்து உயிர்களும் அடியோடு அழியப்போகின்றன என்பதாக திரைப்படத்தின் சில பிரமாண்டமான போட்டோக்களோடு அந்த மெயில் சொல்லியது.நம்பமுடியவில்லை.இன்னும் சிலர் எட்டாவதாக நெபுரு எனும் கற்பனைக்கோள் நம்பமுடியாத வேகத்தோடு பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.அனேகமாக அது 2012 ம் ஆண்டில் நம்மீது மோதலாம் என்கிறார்கள்.'என்கிறார்'களோடு முடிந்துவிட்டால் சந்தோஷமே.நாம் இன்னும் கொஞ்ச காலம் நம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கலாம்.Wikipedia மேற்சொன்ன யாவும் யூகங்கள் தான் டோன்ட் வேஸ்ட் யுவர் டைம் என்கிறது.
எது எப்படி இருந்தாலும் ஆர்தர் சி கிளார்க் நினைத்தபடி,Darvin சொன்னபடி மனித
குலம் எந்த சூழலிலும் எப்படியும் தப்பிப் பிழைத்துக்கொள்ளும்.Survival of the fittest(!).

Friday 2 October, 2009

கட்டுரை -எழுத்துப்பிழைகளும் வலைப்பூக்களும்

இன்றைய தேதியில் அனேகமாக இணையத்தைப் பயன்படுத்துகிறவர்கள் எல்லோரும் வலைப்பூக்களில் எழுதவும் செய்கிறார்கள். தங்களுக்கு
சொந்தமான வலைத்தளத்தில் அல்லது வலைப்பூவில் என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகிவிட்ட நிலையில்,போன வாரம் ஒருவர் டீக் குடிக்க தான் கடைக்கு நடந்து சென்றதை அவ்வளவு ஸ்வாரஸ்யமாக எழுதியிருந்தார்.நானும் கூட என் வீட்டு நாய், குட்டிகள் ஈன்றதை பதிவு செய்யலாம் என்று நினைத்த போது,நாய் மறுத்து விட்டது.

இணையத்தில் தங்களது எண்ணங்கள்,அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கில் blog ஆரம்பிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தன் மொழியின் பெருமையினை மறந்து,அது ஆங்கிலமோ தமிழோ தெரிந்தோ தெரியாமலோ எழுத்துப்பிழை எனும் அரக்கனை சாதாரணமாக தத்தமது எழுத்துக்களில் விடுதலை செய்து விடுகிறார்கள்.நான் தமிழில் நெட்டில் வரும் பத்திரிக்கைத்தளங்கள்,வலைப்பூக்கள்,தமிழாக்கங்கள் இன்ன பிறவற்றில் நிறைய எழுத்துப்பிழைகளை கவனித்தும் படித்தும் வருகிறேன்.தமிழில் எழுதும்போது எழுத்துப்பிழை,கருத்துப்பிழை,இலக்கணப்பிழை தோன்றுவது நம்மில் பலருக்கு இயல்பே எனினும் அவற்றை எளிதில் மறுபடி தோன்றாமல் திருத்திக்கொள்ள முடியும்.அதுவும் வலைப்பூ இடுகை இடுபவர்களில் சராசரியாக இருபது வயதைத் தாண்டியவர்கள் அதிகப்பேர் எனும்போது.இடுகைகளை Transliteration(மொழிஒலிபெயர்ப்பு?) செய்யும்போது இவ்வாறான பிழைகள் சகஜம்.வாசிப்பவர்கள் நன்றாக தமிழ் தெரிந்தவர்கள் என்றால் பிரச்சினை ஏதும் இல்லை,அவர்கள் அரைகுறையாளர் அல்லது இப்போதுதான் கற்பவர்கள் எனில் அவர்கள் தவறாக கற்றுக்(அ)புரிந்து கொள்ளக்கூடும்.அதற்கான காரணகர்த்தா அந்த குறிப்பிட்ட இடுகையை பதிவு செய்த நாமே.Mark Twain,Robert Louis Stevenson போன்றோர்க்கும் இந்தத் தொல்லைகள் இருந்திருக்கின்றன. அதனால்தான் Mark Twain இப்படிச் சொன்னார் போலும்:
"I don't give a damn for a man that can only spell a word one way."

பொதுவாக பொதுஜன வார,மாத இதழ்களில்,சில சமயம் டிவி சானல்களில் கூட இப்படிப்பட்ட பிழைகள் நிகழ்வதைக் காணலாம்.இத்தனைக்கும் அங்கெல்லாம் அச்சுபிழை ,எழுத்துப்பிழை என்று பல பிழைகள் திருத்துவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் .ஆனால் வலைப்பூக்களில் அப்படி proof reader,editor என்று யாரும் இல்லை,என்றாலும் கண்டிப்பாக எழுத்துப்பிழைகள் தூக்கிலேற்றப்படவேண்டியவைகளே.அதனதன் ஆசிரியர் தான் தவறுகளுக்கு முழு பொறுப்பு.

Tuesday 29 September, 2009

ஒரு Science Fiction கவிதை

எல்லோரும் சயின்ஸ் பிக்சன் சிறுகதைகள் எழுதிகொண்டிருக்க,நான்
கொஞ்சம் வித்தியாசமாய் யோசித்ததன் விளைவே இந்த "அது 23 ம் நூற்றாண்டு"

அண்டமே விழாக்கோலம் பூண்டிருக்க,
இந்தியாவும் சீனாவும் இணைந்து நடத்திய
இரு பால்வெளித்திரள்களுக்கு இடையேயான
ஆளில்லா வான்கார் பந்தயத்தில்
இந்தியாவுக்கு இரண்டாம் இடம்
அனுமதிக்கப்பட்டவை ஒளியின் வேக கார்கள் மட்டும்.
இணையம்- 3 ன் நேரடி ஒளிபரப்பினை
ரசித்துக்கொண்டிருக்கும், இந்திய
ரோபோட் குடும்பங்களின் வாட்டமான முகம்
காட்டிக்கொடுக்கிறது, அந்த மாதம்
விநியோகிக்கப்பட வேண்டிய
boostup chargerகள், பல்வேறு
அரசியல் காரணங்களால் தள்ளிப்போடப்பட்டதை.
அது இருபத்து மூன்றாம் நூற்றாண்டின்
ஆரம்பகாலமாக இருக்கலாம் . .. 

Saturday 26 September, 2009

சினிமா விமர்சனம்-உன்னைப் போல் ஒருவன்



இந்தியாவின் இரண்டு தலை சிறந்த நடிகர்கள் இணைந்து நடிக்கும் - என்ற விளம்பர வாசகத்திலிருந்து படம் வேகம் எடுப்பதாகக் கொள்ளலாம். ஒரு சராசரி வாழ்க்கை வாழும் நடுத்தர வயது மனிதனுக்கும்(கமலஹாசன்), தனது கடமையை சரிவரச் செய்து வரும் காவல்துறை ஆணையருக்கும்(மோகன்லால்) இடையே நடக்கும் ஒரு நாளின் நிகழ்வுகள் தான் கதை.நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளில் சம்பந்தம் உடைய நான்கு தீவிரவாதிகளையும் விடுவிக்கும்படியும் இல்லாவிட்டால் சென்னை நகரில் வைக்கப்பட்டுள்ள ஐந்து சக்தி வாய்ந்த பாம்களால் நகரத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் நகரின் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தின் உச்சியில் இருந்து கொண்டு காவல்துறை ஆணையருக்கு மிரட்டல் விடுக்கிறார் நம் common man.அப்போதில் இருந்து பரபரக்கிறது காவல் துறை.தான் சொன்னது உண்மை என்பதை நிரூபிக்க annasalai police station ல் தான் வைத்த bomb ஐ பற்றி தகவல் அளிக்கிறார்.matter is too serious என்பதை உணர்ந்த அதிகாரி ,CM(original CM வீட்டைக் காட்டுகிறார்கள்,குரல் போலி) மற்றும் home secretary(லக்ஷ்மி)ன் காதுகளுக்கு கொண்டு செல்கிறார். Negociation deal படி தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே மற்ற குண்டுகள் இருக்குமிடத்தைக் கூறுவேன் என்கிறார்.இடையே இந்த நியூஸ் பரபரப்பாக media விற்கும் தீனி கொடுக்கிறார்.தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டார்களா, அவர்களை வைத்து நம் common man என்ன செய்கிறார் என்பது மீதி.
ஒரு உயரமான-கட்டி முடிக்கப்படாத கட்டிடம்,ஒரு லேப்டாப் ,ஒரு டிவி,ஒரு டெலிபோன்,பைனாக்குலர்,ஒரு மொபைல்,சில relaince சிம் கார்ட்ஸ் இவை இந்த பக்கம் கமல் கேரக்டர் சார்ந்த சுற்றுபுறம்.அந்த பக்கம் ஒரே ஒரு ரூம் ,சில கம்ப்யூட்டர்கள்,மற்றும் ஒரு போலீஸ் ஸ்டேஷன்.இவைகள் தான் கதையில் அதிகமாக வரும் லோக்கேசன்கள் .
சும்மா சொல்லக்கூடாது! கமல் ஹிந்தியில் வெளிவந்த A Wednesday திரைப்பட உரிமையை போட்டியினிடையே வாங்கி அதன் சாரம் மாறாமல் தமிழில் மிக நன்றாக ரீமேக்கியிருக்கிறார்.
  • சக்ரியின் Direction,விறுவிறுப்பின் வேகம் குறையாமையில்,பாத்திரதேர்விலும் (சந்தான பாரதி ,ராஜா தவிர-தீவிரவாதிகளை இப்படியும் தண்டிக்கலாம்) தெரிகிறது.
  • ஒளிப்பதிவில் பளிச் ரகம்.
  • இசையில் புலிக்கு பிறந்த சுருதி ஹாசனின் சில இடங்களில் வெறுமை(இசை இல்லாமை)யும் பல இடங்களில் தேவைக்கேற்பவும்.நடிப்பு கைவிட்டாலும் பிழைத்துக் கொள்ளுவார்.
  • இரா.முருகன்(அரசூர் வம்சம்,ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்) வசனத்தில் மிளிர்கிறார்(!).சிரிப்பூட்டுகிறது நிஜமாகவே நிறைய இடங்களில்.உ-ம்,மோகன்லால்,லக்ஷ்மி பேச்சுகள், அந்த IIT dropout hacker,டிவில பேச போலீஸ் மனப்பாடம் செய்து பேசுவது என்று,சுஜாதா தாக்கம்.வசனத்தில் கமல் உதவியிருப்பார் போல.
  • நடிப்பில் வழக்கம்போல் கமல்,மோகன்லால் அருமை.
  • ஆரிப் கானாக வரும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு இது இரண்டாவது படம்(முதல் படம்: அபியும் நானும்) தோற்றத்திலும் நடிப்பிலும் பின்னியெடுக்கிறார்.மின்னுவார் நல்ல கதை கிடைத்தால். அந்த இன்னொரு போலீசும்.
புதுமை : பாடல்களுக்கு தனி ஆல்பம்,ரெட் ஒன் கேமரா (என்று சொல்கிறார்கள்.)

நிறைவாக, நாலு பைட் ,ஐந்து பாடல்கள் ,தனி காமெடி ட்ராக்(நல்ல வேளை) இல்லா ,தரமான 110 நிமிஷ படம்.புதுமையான கதை,கடைசி வரை வேகத்தை குறைக்கவே இல்லை. R K Lakshman's common man அங்கே(you said it) அப்பாவியாக, இங்கே(படத்தில்) கொடுமைகளைக் கண்டு பொங்கி எழும் anti terrerist ஆக.
ஆக படத்தில் குறையாக,ஒரு போலீஸ் இன்னொரு போலீசை அடிப்பது duty ல் இருக்கும்போதே,பழைய குண்டு வெடிப்புச் சம்பவங்களை திரும்பத் திரும்ப (இரண்டு முறை ) நினைவு படுத்து(ஸ்ஸ்ஸப்பா)கிறார்கள்,இதெல்லாம் ஒரு குறையே இல்லை.என்ன, குப்பனுக்கும்,சுப்பனுக்கும் புரியாத பாஷையில் திரைப்படம் அவ்வளவுதான்.
அப்ப கருத்து : தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் வெல்ல முடியுமாம் !

Tuesday 22 September, 2009

எனது கவிதைகள்

இயற்கையான தமிழ்

எண்திசையும் பரவிக் கிடக்கிறது இயற்கை
பச்சையாய்,நீலமாய்,
மஞ்சளாய்,வெண்மையாய்
என் தமிழ் போல்.
செடியும் பூக்களும்
கடலும் வானமும் ஆயின
தான் தோன்றிகள்,ஆயினும்
என் தமிழ் அதற்கு முன் தோன்றியதால்
முன்னும் என் மூதாதையர் வணங்க
பின்னும் நான் வணங்கி மிச்சமிருக்கும்
தாய்த்தமிழ் காண,
சந்ததியர் காத்திருக்கின்றனர் வரிசையில்..!


நீர்ப்பூக்கள்

* அதிர்வலைகளின்
அரசல் புரசலான செய்திகேட்டு
அக்கம்பக்கத்து பூக்கள் கண்சிமிட்டும்
மஞ்சள் பூவும்,சிவப்பு பூவும்
மருதலித்ததனால் விளங்கும்
தாயானதால் தேங்கிய தண்ணீருக்கும் சம்மதம்
பூவானம்,பூமழை, பூநிலம்
உதிர்த்த நீர்ப்பூக்கள்
ஒன்றாகிக் கொண்டாடும்
உயரம் பறந்தவைகள்
சல்லெனக் கீழிறங்கி
தண்ணீர் மோதிப்பின் உயரம் தொடும்
தவளைக் குதித்தாடிய குளத்தில்,
நிலத்தை  உற்றுநோக்கி
முணுமுணுக்கும் நிழல் ம் .. போதும் வாழ்க்கை
எதிர்கரையில் துணைப்பேச்சுக்கு ஆள் தேடும் வயதானகட்டை.


* சொந்த நிலம்,
சொந்த வீட்டுக்கனவுடன்
டவுனுக்கு வண்டியேறிய
திசை தெரியாப் பறவை
இல்லையென்றாலும்
(வாழ) வழி அறியாக் குழந்தைக்கு
பத்து வருட போராட்டத்தில்
இப்போதும் சொந்தமாயிருக்கிறது
காட்டுக் கொட்டாயிலிருந்த
மழைநேரத்தில், டீக்குடிக்கக்
கூட்டம் கூடும், கூரை ஒழுகும்,
அந்த சாக்குப்பை போர்த்திய புரோட்டாக்கடை.